கூடலூர்: பூச்சிகளை உணவாக்கும் அரிய வகை அசைவ தாவரங்களை காக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. கூடலூர் பகுதியில் உள்ள மண் மற்றும் வனவளங்கள், பல அரிய வகை தாவரங்கள், மூலிகைச் செடிகள் வளரும் தன்மை கொண்டவையாக உள்ளன.
இதில், பூச்சிகளை உண்டு வாழும் அசைவ வகை தாவரச் செடிகள் குறிப்பிடத்தக்கவை. இவ்வகை தாவரங்கள் "டொசீரா பர்மானி, டொசீரா பெல்டேட்டா, டொசிரா இன்டிகா மற்றும் குளோரிய ஸ்பெல்லாரிஸ்,' என்ற தாவரவியல் பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இவ்வகைச் செடிகள் தென்மேற்கு பருவ மழை காலங்களில் வனப் பகுதிகளில் ஈரமான புல்வெளி, மண் சாலைகளின் ஓரம், ஈரமான மண் கற்களில் வளரக் கூடியவை. ஆண்டுக்கு ஒரு முறை வளர்ந்து மறையும் "டொசீரா பர்மானி' என்ற அசைவ தாவரம் தற்போது, கூடலூர் பகுதியில் சில இடங்களில் காணப்படுகிறது.
ஈரம் நிறைந்த மண் கற்களின் மேல் படர்ந்து காணப்படும் வட்ட வடிவமான இத்தாவரத்தில் 4 முதல் 5 அங்குளம் உயரமுள்ள நீண்ட காம்பில் பூக்கள் காணப்படுகின்றன. தாவரத்தின் இலைகளை சுற்றிலும் காணப்படும் சிறு சிறு தூவிகளின் முனையில் பசை போன்ற திரவம் உள்ளது. செடிகளுக்கு அருகே வரும் சிறு பூச்சி இனங்கள் அந்த பசை போன்ற நீட்சிகளில் ஒட்டிக் கொள்கிறது. அந்த பூச்சிகளில் இருந்து "நைட்ரஜன்' ஊட்ட ச் சத்தை இச்செடிகள் உறிஞ்சி கொள்கின்றன. கூடலூரில் தொடரும் வன அழிவினால், இதுபோன்ற பல அரிய வகைச் செடிகள் அழிந்து வருவது அதிர்ச்சியான உண்மை. இதுபோன்ற தாவரங்களை கண்டறிந்து அதை காப்பாற்றவும், அதன் இனத்தை பெருக்கவும் வன ஆராய்ச்சி மையத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
No comments:
Post a Comment